அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார்.
அந்த வகையில், உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு டொனால்ட் டிரம்ப் தனது அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். அத்துடன் விவேக் ராமசாமி உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களையும் முக்கிய பதவிகளில் நியமனம் செய்திருக்கிறார். இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் முக்கிய பதவியில் நியமித்துள்ளார்.
தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ) தொழில்நுட்பத்தில் வல்லுநராக இருக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டர், பேஸ்புக், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில்தான் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். மேலும், தொழில்நுட்பத்திற்கான அதிபரின் ஆலோசனைக் குழுவிலும் ஸ்ரீராம் கிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.