Skip to main content

‘வி.சி.க-வை பயன்படுத்திய ஆதவ் அர்ஜுனா; கணக்கு போட்ட பாசிச சக்திகள்’ - விவரித்த பாவலன்

Published on 11/12/2024 | Edited on 11/12/2024
Pavalan spoke about the removal of Adhav Arjuna from the post of VCK Deputy General Secretary

‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் பாவலன், அக்கட்சி துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்தது குறித்து தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.

மிக முக்கிய நபர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று சொல்வது தவறு. 10 பேரில் ஒருத்தராக இருந்த அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். வி.சி.க.-வை பொறுத்தவரை பொதுச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள் என அனைவரும் ஒரே கேட்டகிரி தான். இதில் தொடக்க காலத்திலிருந்து வி.சி.க.-வில் பயணிப்பர்களுக்கு தலைவர் திருமாவளவன் எம்.பி. முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியில் இணைந்து 6 மாதம் ஆகிறது. அவர் வந்ததும் கட்சியில் முக்கியமான பொறுப்பு கொடுத்தார்கள். ஆனால் அவர் அந்த பொறுப்புக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ளவில்லை. அவராகவே வெளியேறக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டார்.

இதர சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், இளைய தலைமுறைகளுக்கு வாய்ப்பு என இந்த அடிப்படையில்தான் கட்சி மறுகட்டமைப்பு செய்து ஆட்களைச் சேர்த்தோம். அதே அடிப்படையில்தான் ஆதவ் அர்ஜுனாவையும் கட்சியில் சேர்த்தோம். அவர் கட்சியில் இணைந்தபோது தேர்தல் வியூகங்களை கையாளுவதைப் பற்றி நிறுவனம் நடத்தி வந்தார். அதனால் அவர் கட்சிக்கு பயன்படுவார் என்றுதான் சேர்த்துக்கொண்டோம். அவரும் சில வேலைகளை செய்து கொடுத்தார். ஆனால், கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக அவரின் நடவடிக்கைகள் இருந்தது. அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைக் காட்டுவதற்காக வி.சி.க.-வை அவர் பயன்படுத்திக்கொண்டார். தி.மு.க. மீது வெறுப்பைக் காட்ட வி.சி.க.-வை கருவியாகப் பயன்படுத்தினார் என்பதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவரை வி.சி.க. பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை, அந்தளவிற்கு கட்சி பலவீனமாகவும் இல்லை.

கட்சியில் நிறைய பின்புலம் இல்லாதவர்களுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆதவ் அர்ஜுனா தி.மு.க.வுக்கு தேர்தல் நன்கொடை கொடுத்ததாகவும் தகவல் இருக்கிறது. தி.மு.க.-வுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்துள்ளார். இது போன்ற பின்புலத்தால் ஆதவ் அர்ஜுனா வி.சி.க.வில் இருந்தது பலருக்கும் தெரிய வந்தது. அவர் தொடர்ந்து வி.சி.க.-வில் இருந்துகொண்டு தி.மு.க.-வை விமர்சனம் செய்ததை கட்சி அனுமதிக்கவில்லை. அவர் மீது எடுத்தோம் கவுத்தோம் என்று நடவடிக்கை எடுக்க வி.சி.க. என்ன சாதி சங்கமா? அனைத்து தரப்பு மக்களாலும் நன்மதிப்பு பெற்று வளர்ந்து வரும் வி.சி.க. தமிழ்நாட்டு அரசியலில் மூன்றாவது இடத்திலும் தொடர் பேசுபொருளாகவும் இருக்கிறது. இதை உருவாக்கியது ஆதவ் அர்ஜுனா கிடையாது. தமிழ்நாட்டு அரசியல் களத்தின் ஆட்டநாயகன் திருமாவளவன் தான். ஆதவ் அர்ஜுனா வந்து ஆறு மாதம்தான் ஆகிறது. ஆனால் வி.சி.க. வருடக்கணக்கில் பேசுபொருளாக இருக்கிறது. 35 ஆண்டுகளாகப் போடாத மாநாடு கிடையாது. வெல்லும் ஜனநாயக மாநாட்டில் ஆதவ் அர்ஜுனா நிதி கொடுக்கவில்லை. அந்த மாநாட்டிற்கு கட்சியில் இருக்கக்கூடிய கடைநிலை தொண்டர்கள் வரை கை காசை போட்டுள்ளனர். அந்த காசை வைத்துத்தான் கட்சி நடத்தி தேர்தல்களைச் சந்தித்து மாநாடுகளை நடத்தியிருக்கின்றோம். ஆதவ் அர்ஜுனா ஒரு பணக்காரர். அதற்காக அவர் வந்துதான் செலவு செய்தார் என்று சொல்லக் கூடாது.

ஆதவ் அர்ஜுனா ஜனநாயக சக்தியாக இருப்பார் என்று நினைத்து கட்சியில் இடம் கொடுத்தோம். விடுதலை சிறுத்தைகள் என்பது தனி நபருக்கானது அல்ல. விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்காக இயங்கக்கூடிய பேரியக்கம். அப்படி இருக்கும்போது மக்கள் நலன் சார்ந்துதான் கட்சி முடிவெடுக்க முடியும். மக்கள் நலன் சார்ந்துதான் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் திருமாவளவனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இந்தியா கூட்டணியிலும் அவரின் அழுத்தம் இருக்கிறது. இப்படி மக்களுக்காக இருக்கும் வி.சி.க. கட்சி பொறுப்பில் இருந்த ஆதவ் அர்ஜுனா, அவரின் விருப்பு வெறுப்பை திணிக்கக்கூடிய கட்சியாக கையாளும்போது, கட்சி எப்படி வேடிக்கை பார்க்கும்? ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று திருமாவளவன் காலம் காலமா பேசிவருகிறார். அப்போது ஏன் அதைப் பெரிதாகப் பேசவில்லை. அன்றைக்கு ஏன் அதை விவாதமாக மாற்றவில்லை. ஆனால், ஆதவ் அர்ஜுனா பேசியதும் தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி தி.மு.க.-வை பலவீனப்படுத்தி தாமரையை மலர வைக்க பாசிச சக்திகள் கணக்குப் போடுகின்றனர். அந்த கணக்கில் நாங்கள் மண் அள்ளி போட்டுவிட்டோம் என்றார்.