நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு பின்பு இதுவரை 143 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன் தினம் (19-12-23) காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதைப் போல், அனைவரின் முன்னிலையில் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது செல்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்தார். ஜகதீப் தன்கரை போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய காட்சியையும், அதனை ராகுல் காந்தி வீடியோவாக எடுத்த காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு ஆளும் கட்சியான பா.ஜ.க எம்.பி.க்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதே போல், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் இந்த விவகாரம் தொடர்பாக தனது வேதனையை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வேதனையை தெரிவித்ததாக துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்ததாவது, “பிரதமர் மோடி என்னை தொலைபேசி மூலம் அழைத்து சில மாண்புமிக்க நாடாளுமன்ற எம்.பி.க்களின் கேவலமான செயல் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்தினார். கடந்த 20 ஆண்டுகளாக இது போன்ற அவமானங்களை அவர் எதிர்கொண்டு வருவதாகவும், ஆனால், நாட்டின் துணை ஜனாதிபதி போன்ற அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இது போன்ற நிலை ஏற்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் என்னிடம் கூறினார். அதற்கு நான்,“ஒரு சிலரின் அபத்தமான செயல்கள் மூலம், கடமையை செய்வதில் இருந்தும், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்துவதில் இருந்தும் என்னை தடுக்க முடியாது. இது போன்ற அவமானங்கள் என்னை என் பாதையில் இருந்து திசை திருப்ப முடியாது என்றேன்” எனப் பதிவிட்டுள்ளார்.