பிரபல பாலிவுட் நடிகையும், ஆபாச பட நடிகையுமான சன்னி லியோன் பெயரில் அரசு திட்டத்தின் மூலம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் போலவே, இந்த மாநிலத்தில் உள்ள திருமணமான பெண்களுக்கு மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தகுதியான பயனாளிகள் குறித்து பொறுப்பு அதிகாரி அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த தொகை டெபாசிட் செய்யப்பட்ட கணக்கு ஒன்று பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர் தான், சன்னி லியோன் பெயரில் போலியாக கணக்கை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, வீரேந்திர ஜோஷி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை அவர் எவ்வளவு பணம் பெற்று வந்துள்ளார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை பெயரில் போலி கணக்கை உருவாக்கி அரசு திட்டத்தில் மோசடி செய்த விவகாரம், அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.