மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, நேற்று (22-12-24) தனது வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தொகையை கொண்டு வருமாறு மிரட்டியுள்ளனர்.
இதில் பதற்றமடைந்த தந்தை, இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போன் எண்ணை வைத்து குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள சோதனையிட்டனர். அதில், அவர்கள் மேற்கு வங்கம் - பீகார் எல்லை பகுதிக்கு அருகே இருப்பதாக காட்டப்பட்டது. அதன் பேரில், இஸ்லாம்பூர் மற்றும் ராய்காஞ்ச் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல்துறைக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கை விடுத்தனர்.
இறுதியாக, குற்றவாளிகள் இருக்கும் சரியான இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு விரைந்த போலீசார், சிறுமியை கடத்திய கடத்தல்காரர்களான இஜாஸ் அகமது, ராஜு முஸ்தபா ஆகிய இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் தந்தையிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, கடத்தல்காரர்கள் பீகாருக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டமிருந்ததாகத் தெரியவந்தது. இதனையடுத்தி, கடத்தல்காரர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 22ஆம் தேதி காலை 11:40 மணியளவில் கடத்தப்பட்ட சிறுமியை, புகார் தெரிவிக்கப்பட்ட 5 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.