Skip to main content

 அல்லு அர்ஜூன் வீடு தாக்கப்பட்ட விவகாரம்; ரேவந்த் ரெட்டி கண்டனம்

Published on 23/12/2024 | Edited on 23/12/2024
revanth reddy about allu arjun house issue

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 - தி ரூல்’. இப்படத்தின் சிறப்பு காட்சி படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் இரவு திரையிடப்பட்டது. அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடுத்து கொண்டு சென்றனர். அந்த கூட்ட நெரிசலில் ரேவதி ( 39) என்ற பெண் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மயக்கமான நிலையில் கீழே விழ, பின்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த சிறுவன் கடந்த 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

முன்னதாக அந்த பெண் இறந்ததை தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு கடந்த 13ஆம் தேதி கைதானார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்ட நிலையில் கைதான அன்றே அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா சட்டமன்றத்தில் மஜ்லிஸ் கட்சி உறுப்பினர் அக்பருதீன் ஒவைசை பேசினார். அதன்பிறகு பேசிய அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, “அல்லு அர்ஜுன் சில மணிநேரம் தான் சிறையில் இருந்தார். ஆனால் அவரைக் காண தெலுங்கு திரையுலகமே சென்றிருக்கிறது. அவருக்கு கை, கால், கிட்னி ஏதாவது போய்விட்டதா? எதற்காக இந்த ஆதரவுகள்? நெரிசலில் சிக்கி பலியான பெண்ணைக் குறித்தோ, சிகிச்சையில் இருக்கும் அவரது மகனைக் குறித்தோ இவர்கள் கவலைப்பட்டார்களா? ” என கடுமையாக அல்லு அர்ஜூனை விமர்சித்தார். இதையடுத்து சிறப்பு காட்சியின் போது திரையரங்கிற்கு சென்ற அல்லு அர்ஜூனின், சிசிடிவி காட்சிகள் ஹைதராபாத் போலீசாரால் வெளியிடப்பட்டது. மேலும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அவர் திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது, பெண் இறந்த விஷயத்தை தெரிவித்தும் வெளியே செல்ல மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் வீட்டின் முன்பு உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கை குழு மாணவர் சங்கத்தின் சார்பில் உயரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வீட்டின் முன் இருந்த பூந்தொட்டிகளை உடைத்து கல் வீச்சுகளிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூன் பெயரை குறிப்பிடாமல், தனது எக்ஸ் பக்கத்தில் வீடுகள் தாக்கப்பட்டதற்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “திரையுலக பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் மாநில டிஜிபி மற்றும் நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன். இந்த விஷயத்தில் எந்த அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்