விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிவடையாத நிலையில் கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் முதல் சீர்காழி அருகே சட்டநாதபுரம் வரை 55 கிமீ தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிந்ததாக அறிவித்து கொத்தட்டையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் டிச 23 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது.
இதற்கு பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அனைத்து வகையான வாகன உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நெடுஞ்சாலைப் பணிகள் முழுவதும் முடிவடைந்த உடன் டோல்கேட்டை திறந்திடவும், தனியார் பேருந்துகளுக்கு அறிவித்துள்ள அதிக கட்டணத்தையும், லாரிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தியும், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லாமல் பாஸ் வழங்கிடவும், அறிவிக்கப்பட்ட கட்டணம் கூடுதலாக இருப்பதால் கட்டணத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் டிச 21 அன்று டோல்கேட் முற்றுகையிடுவது என அறிவித்திருந்தது.
இதுகுறித்து கொத்தட்டை டோல்கேட் அலுவலகத்தில் அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் டிச 21 ஆம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், தனியார் பேருந்து, லாரி , வேன் உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம், பரங்கிப்பேட்டை வர்த்தகர்கள் சங்கம், முட்லூர் மற்றும் பெரியபட்டு வர்த்தகர்கள் சங்கம், முட்லூர் ஜமாத்தார்கள், சிலம்பிமங்களம் மற்றும் தீர்த்தாம்பாளையம் கிராம முக்கியஸ்தர்கள், 6 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கொத்தட்டை டோல் கட்டணத்தை குறைக்க வேண்டும், 60 கி.மீ ஒரு டோல்கேட் என்பதை உறுதி செய்ய வேண்டும். முழுமையாக விழுப்புரம் முதல் நாகை வரை பணிகள் முடிந்தவுடன் வசூல் துவக்கப்பட வேண்டும், 20 கி.மீ உள்ளவர்களுக்கு மாதம் ரூ 340 என்பதை ரத்து செய்ய வேண்டும், அதே நேரத்தில் 50 கி.மீ உள்ளவர்களுக்கு மாதம் ரூ.340 பாஸ் என்பதை விஸ்தரிக்க வேண்டும், தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு விதித்துள்ள மாதம் ரூ.90 ஆயிரம் அநியாய கடனத்தைக் குறைத்திட வேண்டும்
தீர்த்தாம்பாளையம் மற்றும் சிலம்பிமங்களம் கிராம மக்களுக்கு உரிய பாதை வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும், டோல் வசூலுக்கு அவசரப்படும் நகாய் நிர்வாகம், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வழங்காத தொகையை உடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 23-ஆம் தேதி டோல்கேட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் டிச 23 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டோல்கேட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு உறுப்பினர் மூசா, ஒன்றிய செயலாளர்கள் விஜய், ஆழ்வார், மாவட்ட குழு உறுப்பினர் அம்சயால், பாமக மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி , 10 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜமாத்துகள், மாதர் சங்கம், வர்த்தக சங்கம், விவசாயிகள் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வாகனம் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். அநியாய கட்டணத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அங்கு இருந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்கினர் சக்திவேல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கலந்து கொண்டனர். இதில் தனியார் பேருந்துகளுக்கு ரூ.14 ஆயிரம் கட்டணத்தில் மாதம் முழுவதும் பயணிப்பது என்றும், கிராமப்புறங்களில் ஒவ்வொரு கிராமங்களிலும் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்து தருவது, கிராமங்களுக்கு சர்வீஸ் சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஒப்புதல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உள்ளூர் விவசாயிகள் உள்ளூர் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இதனை ஏற்றுப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
கோரிக்கையை நிறைவேறப்பட்டால் இதைவிடப் பெரிய அளவில் பொதுமக்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் டோல்கேட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் - கடலூர் மார்க்கத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அனைத்தையும் வேலை நிறுத்தம் செய்து டோல்கேட் முன்பு வரிசையாக நிறுத்தி வைத்தனர்.