வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மஞ்சு வாரியார், சூரி, கெளதம் வாசுதேவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை பாகம் 2. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விடுதலை பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்புடன் நேற்று முன்தினம் (20.12.2024) வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் வெற்றிமாறன் இயக்கிய படத்தில் அதிக வசூல் ஈட்டிய படமாக இப்படம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விசிகவின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்‘விடுதலை 2’ படத்தை இன்று (22.12.2024) கண்டு ரசித்தார். அதனைத்தொடர்ந்து, படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மகத்தான படைப்பாக விடுதலை இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இதுவரை இயக்கியுள்ள அனைத்துப் படங்களுமே மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தவரிசையில் இதுவும் ஒரு வெற்றிகரமான திரைப்படம். அதேவேளையில் இந்தப் படம் பேசியிருக்கிற அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டு தேர்தல் களத்தில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசுகிற அரசியல், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மறுத்து மக்களை அரசியல்படுத்தி, புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும் எனப் பேசுகிற கம்யூனிஸ்ட் அரசியல் இன்னொன்று. கம்யூனிஸ்ட் கட்சிகளில் இரண்டு வகை உண்டு. மக்களை அரசியல்படுத்தி, அமைப்பாக்கி போர்க்குணம் மிக்கவர்களாக வளர்த்தெடுக்கக்கூடிய அரசியல் இன்றைக்கு இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசியல் என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது வகை அரசியலை நுட்பமாகப் பேசுகிற, விவாதிக்கிற களமாகத்தான் விடுதலை பாகம் 2 அமைந்துள்ளது. தமிழ் சூழலுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்த போராளிகளைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.