இளம் ஜோடிகளை, கிராம மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா பகுதியைச் சேர்ந்த காதலர்களை, அந்த கிராமத்தினர் சிலர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
அந்த வீடியோவில், காதலர்கள் இருவரையும் எதிர் எதிரே கட்டி வைத்து கிராமத்தினர் சிலர் அடித்து தாக்குகின்றனர். இதில் வலியால் துடித்த அந்த பெண் கதறி அழுதுக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அப்பெண்ணின் காதலன் சக்ரா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும், இவர்களது காதலுக்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அவர்களை கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.