இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்து வருகிறது. ஒரு கட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது தினசரி கரோனா பாதிப்பு 50 ஆயிரமாக குறைந்துள்ளது. கரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்கள், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
சுற்றுலாவிற்கு பெயர்போன கோவாவிலும் தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கோவாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை.இந்தநிலையில் கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என கோவாவின் துறைமுக அமைச்சர் மைக்கேல் லோபோவிடம் கேள்வியெழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "நாம் ஜூலை வரை காத்திருக்க வேண்டும். கரோனா பாதிப்பு பூஜ்யத்திற்கு செல்லட்டும். முறையான தடுப்பு நடவடிக்கைகளோடு மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு கோவாவில் அனுமதி வழங்கப்படும். மாநிலத்தில் மீண்டும் சுற்றுலா திறக்கப்பட்டபிறகு, முதல் மூன்று மாதங்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டவர்களுக்கும், கரோனா நெகட்டிவ் சான்று உடைய சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.