இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்துவருகிறது. இருப்பினும் கரோனா மூன்றாவது அலை வரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கரோனா இரண்டாவது அலை எப்போது முடிவுக்குவரும், மூன்றாவது அலை எப்போது தொடங்கும், மூன்றாவது அலையின்போது எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்பது போன்ற கேள்விகளுக்கு, கரோனா குறித்து ஆலோசனை அளிக்கும் மத்திய அரசு குழுவின் விஞ்ஞானி மணிந்திர அகர்வால் பதிலளித்துள்ளார்.
மணிந்திர அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இரண்டாவது அலை முடிவுக்குவரும் என தெரிவித்துள்ளார். கரோனா மூன்றாவது அலை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் உச்சத்தை எட்டலாம் எனக் கூறியுள்ள அவர், இரண்டாவது அலையில் பதிவான தினசரி கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் பாதியளவு மட்டுமே மூன்றாவது அலையில் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மணிந்திர அகர்வால், கரோனா வைரஸின் புதிய திரிபு உருவானால், மூன்றாவது அலையில் கரோனா தொற்று வேகமாகப் பரவும் எனவும் கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்துதல் அதிகரிப்பால், நான்காவது அலைக்கு வாய்ப்பு குறைவு எனவும் அவர் கூறியுள்ளார்.