இந்தியா, சீனா இடையே பதட்டமான சூழல் நீடித்து வரும் நிலையில், ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த 15 ஆம் தேதி இரவு நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலால் இருநாட்டு உறவுகளில் புதிய சிக்கல்கள் உருவாகியது. மேலும், கல்வான் பகுதியில் சீனாவிற்கும் இறையாண்மை உள்ளதாகச் சீனா தெரிவித்ததும், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சும் இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கின. இதனை தொடர்ந்து சீனா அத்துமீறலில் ஈடுபட்டால் ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் ராணுவ ஆயுதம் வாங்கவும் மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதட்டம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், அமைதியை நிலைநாட்டும் விதமாக சீனாவின் சூசுல் எனுமிடத்தில் உள்ள மோல்டோ பகுதியில் இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. நேற்று மதியம் தொடங்கிய இந்த கூட்டம், சுமார் 11 மணிநேரத்திற்கு மேலாக நீடித்து, நள்ளிரவு வரை நீண்டது. இந்தக்கூட்டத்தில் இந்திய ராணுவம் தரப்பில் லெப்டினனெட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனாவின் திபெத் ராணுவ மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், கிழக்கு லடாக் எல்லையில் அமைந்துள்ள பதட்டமான பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருநாட்டு ராணுவங்களையும் திரும்பப்பெற்று, மீண்டும் அப்பகுதியை பழைய நிலைக்குக் கொண்டுவர உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அமைதியை நிலைநாட்ட அடுத்தடுத்த கட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.