அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 - 2024 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்கச் செய்தி நிறுவனம் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை லாபம் ஈட்டக்கூடிய சூரிய மின்நிலையத் திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டுள்ளார். அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமம் கொடுத்த நன்கொடையை நிராகரிப்பதாக அம்மாநில முதல்வர் ரேவந்த ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “யங் இந்தியா ஸ்கில்ஸ் யுனிவர்சிட்டிக்காக அதானி உட்பட எந்த அமைப்பிடமிருந்தும் தெலுங்கானா அரசு நிதியோ நன்கொடையோ பெறவில்லை. திறன் பல்கலைகழகத்திற்கு தருவதாக உறுதியளித்த 100 கோடி ரூபாயை ஏற்க மாட்டோம் என அதானி குழுமத்திற்கு அரசு நேற்று கடிதம் எழுதியுள்ளது.
மாநில அரசு அல்லது மத்திய அரசு தான் டெண்டர் கோர வேண்டும் என்று ராகுல் காந்தி தெளிவாக கூறியிருக்கிறார். ஜனநாயக முறைப்படி முறையான செயல்முறையுடன், அதானி, அம்பானி, டாடா என டெண்டர்கள் ஒதுக்கப்படும். யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு பல நிறுவனங்கள் நிதி அளித்துள்ளன. அதே போன்று அதானி குழுமமும் எங்களுக்கு ரூ.100 கோடி வழங்க முன்வந்தது. அதானி குழுமத்திடம் இருந்து ரூ.100 கோடியை ஏற்க மாட்டோம் என்ற மாநில அரசின் முடிவை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.