முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்புகளிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மனுக்களை ரத்து செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 2022 ஆம் ஆண்டிற்கான முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இன்று அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அதில், ஏற்கனவே 2021 ஆம் ஆண்டிற்கான முதுநிலை கலந்தாய்வு நடக்க உள்ளதால் வரும் மே 21 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டிற்கான முதுநிலை நீட் தேர்வை நடத்தினால் குழப்பத்தை உருவாக்கும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த மனுக்களை வழக்காக ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே நாடு முழுவதும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் தவித்து வரும் நிலையில் இதனை காரணம் காட்டி தேர்வுக்குத் தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.