மத்தியப் பிரதேச மாநிலம், ஷிவ்புர் மாவட்டம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் நாரத் ஜாதவ் (28). பட்டியலின சமுகத்தைச் சேர்ந்தவர் இவர், இந்தர்கர் கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், நாரத் ஜாதவ் நேற்று தனது மாமாவுக்கு சொந்தமான வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, வேறு சமுகத்தைச் சேர்ந்த சர்பஞ்ச் பதம் சிங் தனது குடும்ப உறுப்பினர்களான பெடல் தாகத், ஜஸ்வந்த் தாகத், அவதேஷ் தாகத், அங்கேஷ் தாகத், மொஹர் பால் தாகத், தக்கா பாய் தாகத் மற்றும் விமல் தாகத் ஆகியோருடன் அங்கு வந்துள்ளார். மேலும், அங்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த நாரத் ஜாதவிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த, சர்பஞ்ச் பதம் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நாரத் ஜாதவ்வை கடுமையாக தாக்கியுள்ளனர். தடிகளால் அடித்தும், தரையில் வைத்து உதைத்தும் நாரத் ஜாதவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நாரத் ஜாதவ் படுகாயமடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ஷிவ்புர் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நாரத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டியலின இளைஞரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.