மக்களவை உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்துச் செய்வதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 18- ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். எனினும், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பால் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைக் கண்டித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகியோர் மக்களவை சபாநாயகர் முன்பு வந்து பதாகைகளுடன் முழக்கமிட்டு, அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையின் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. மேலும், அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்களை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்காத வகையில் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து, அந்த நான்கு உறுப்பினர்களையும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்திருந்தார்.
இடைநீக்கத்தைக் கண்டித்து, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் மற்றும் காந்தி சிலை முன்பு அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடைநீக்கத்தைக் கண்டித்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு, அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
#WATCH | Delhi: Congress Lok Sabha MPs Manickam Tagore, Ramya Haridas & S Jothimani walk to the house after their suspension was revoked#MonsoonSession pic.twitter.com/8r5dDtiIQl— ANI (@ANI) August 1, 2022
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்பட நான்கு உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாகவும், மக்களவையில் பதாகைகளை ஏந்தி வரக்கூடாது எனவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக மகிழ்ச்சியுடன் அவைக்கு சென்றுள்ளனர்.