புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இளைஞர் ஒருவருக்கு கல்லீரலில் இருந்த 20 செமீ நீளமுள்ள கத்தி அகற்றப்பட்டிருப்பது பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 12 அன்று வயிற்று வலி மற்றும் பசியின்மை காரணமாக எய்ம்ஸ் மருந்துவமனையில் 28 வயதான இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக எக்ஸ்-ரே செய்யப்பட்டு வயிற்றுப் பகுதி பரிசோதிக்கப்பட்டது. அப்போது கல்லீரலில் சுமார் 20 செ.மீ நீளமுள்ள கத்தி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் தாஸ் கூறுகையில் "இந்த அறுவைசிகிச்சை மிக நுட்பமாகச் செய்யப்பட்டது. சிறு பிழையானாலும் அந்த இளைஞன் உயிர்பிழைப்பது கடினமாகியிருக்கும். ஏனெனில் அந்தக் கத்தியானது பித்தப்பைக்கு மிக அருகில் இருந்தது. எனவே அந்தக் கத்தியைக் குடல் சுவர் வழியாகத் துளையிட்டு அகற்றினோம். அந்த இளைஞன் கத்தியை விழுங்கி ஒன்றரை மாதம் இயல்பாக இருந்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. இப்படி ஒரு சம்பவத்தைப் பார்ப்பது இதுதான் முதல்முறை. அவருக்குப் போதைப்பொருள் பழக்கம் இருந்துள்ளது. அதனால் போதைப்பொருள் கிடைக்காத விரக்தியில் கத்தியை விழுங்கி தண்ணீரைக் குடித்துள்ளார். எனவே அவருக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.