Skip to main content

இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசிய கிரிமினல்! திருவண்ணாமலை பிரபல ஆஸ்ரமத்தில் மடக்கிய போலீஸ்! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

criminal arrested in thiruvannamalai

 

கர்நாடகா மாநிலம், பெங்களுரூ மாநகரம், சுங்கத்தடே பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ். அதேபகுதியில் வசிக்கும் 24 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவுகளை தந்துள்ளார். அந்த இளம்பெண் காதலிக்க மறுத்துள்ளார்.

 

கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி என்னை காதலிக்கவில்லையெனில் உன் முகத்தில் ஆசிட் ஊத்திவிடுவேன் என மிரட்டியுள்ளார். மிரட்டலுக்கு பயப்படாமல் அந்தபெண் காதலிக்க முடியாது என மறுத்துள்ளார். உடனே கையில் வைத்திருந்த ஆசிட்டை அந்த பெண்ணின் முகத்தின் மீது ஊத்திவிட்டு தப்பித்துள்ளார். வலியால் அலறி துடித்த அந்த இளம்பெண்ணை அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,


இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஆசிட் ஊத்திய நாகேஷ்சை பிடிக்க 4 தனிப்படைகளை பெங்களுரூ மாநகர காவல்துறை அமைத்தது. அவர்கள் பலவழிகளிலும் தேடத் துவங்கினார்கள். அவனுடைய போட்டோவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநில காவல்துறைக்கு அனுப்பிவைத்தனர். சுமார் 10 நாள் தேடலுக்கு பின்னர் அவர் திருவண்ணாமலையில் தங்கியிருப்பது தெரியவந்தது.


காவி வேட்டி அணிந்துகொண்டு தினமும் திருவண்ணாமலையில் உள்ள பிரபல ஆசிரமம் ஒன்றிற்கு சென்று தியானம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அவருடைய போட்டோவை பார்த்தவர்கள் இதுகுறித்து போலிசுக்கு தகவல் கூறினர். அதன் அடிப்படையில் பெங்களுரூ மாநகர தனிப்படை போலீஸார் மே 12ஆம் தேதி தியானம் செய்துகொண்டிருந்தவர் நாகேஷ் தான் என்பதை உறுதி செய்துகொண்டு அவரை கைது செய்து பெங்களுரூ அழைத்துச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார். 

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.