பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை டெல்லியில் அமைத்து காவேரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் நியமனம் நடைபெற்று வந்தது. ஆனால் கர்நாடகா தரப்பில் மட்டும் உறுப்பினர்கள் நியமிப்பதில் கர்நாடக அரசு இழுத்தடித்து வந்ததது.
இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததில் கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால் இதற்கு விளக்கமளிக்கும் போக்கில் முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடா 140 ஆண்டுகளாக நிலவி வரும் காவிரி பிரச்சனை பற்றிய முழுவிவரங்களையும் ஆழமாக தெரிந்து வைத்துள்ளார் என புகழாரம் சூட்டினார் மோடி.
மேலும் தேவகவுடாவும் காவேரி பிரச்சனையில் மத்திய அரசிடமும், நீதிமன்றத்துடனும் எந்த சுணக்கமும் வைத்துக்கொள்ள வேண்டாம் என முதல்வர் குமாரசாமிக்கு அறிவுரை வங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்தே கர்நாடகா சார்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா தரப்பில் காவிரி ஆணையத்தின் கர்நாடக உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங்கும், காவிரி ஒழுங்காற்று குழு உறுப்பினராக பிரசன்னாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக குமாரசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவக்குமார் கூறுகையில் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தவே உறுப்பினர்களை அறிவித்துள்ளோம். வரும் ஜூலை 2-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.