தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.
அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .
மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.