அரியலூர் மாவட்டம், கொல்லாபுரம் பகுதியில், ரூ.120 கோடி மதிப்பிலான வளர்ச்சி 53 திட்டபணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், ரூ.88 கோடி மதிப்பிலான 507 முடிவற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், 21,862 பயணாளிகளுக்கு ரூ.174 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள வழங்கினார். அதன் பிறகு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர், “திட்டத்தை அறிவித்தோம், நிதியை ஒதுக்கினோம், அதிகாரிகள் இதை பார்த்துக்கொள்வார்கள் என ஓய்வு எடுக்க போகிறவன் நான் அல்ல. கடந்த காலத்தில் ஒரு சிலர் இருந்தார்கள். நாட்டில் என்ன நடக்குது என்றே தெரியாது, தெரிந்தாலும் அதை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வார்கள். பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். நான் பிரச்சனைகளை நேர்கொண்டு நிற்கிறேன். அந்த பிரச்சனைகளை தீர்க்கிறேன். மக்களுக்காக திட்டங்களை தீட்டி, அது செயல்படுகிறது என்று கள ஆய்வு செய்கிறேன். சொன்ன நாளில் திட்டங்களை திறந்து வைக்கிறேன். அதனால் தான் இந்த ஸ்டாலின் எங்கே போனாலும் மக்கள் வரவேற்கிறார்கள். தேடி வந்து நம்பிக்கையோடு மனுக்களை தருகிறார்கள். அந்த நம்பிக்கையை எந்நாளும் காப்பாற்றுவேன் என்று உறுதி தருகிறேன்.
தமிழ்நாடு மக்கள் என் மேலும், திமுக மேலும் வைத்திருக்கக் கூடிய அன்பை பார்க்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொஞ்சம் இல்லை, நிறையவே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் எனக்கு எப்படியெல்லாம் வரவேற்பு தருகிறார்கள் என்பதை அவர்களும் பார்க்கிறார்கள். மக்கள் தன்னை மறந்துவிடுவார்களோ என்று நினைத்து நாள்தோறும் ஊடகங்கள் முன் நின்று பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு கொண்டிருக்கிறார். 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அவர்கள் சிறந்த ஆட்சியை தந்ததாகவும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் தான் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும் சிரிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார். பொய்க்கு மேக் அப் போட்டால் அது உண்மையாகி விடாது. அது இன்னும் பளிச்சென்று அம்பலப்பட்டு போகும்.
மூன்று லட்ச கோடி முதலீட்டை தமிழ்நாட்டில் சேர்த்துவிட்டேன் என்று பெருமையோடு கூறினார். நீங்கள் நடத்தின முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக எவ்வளவு முதலீடு வந்தது? இதனால் எத்தனை பேர் வேலைவாய்ப்புகளை பெற்றார்கள்?. இதையெல்லாம் புள்ளிவிவரங்களோடு உங்களால் சொல்ல முடியுமா? வந்தவர்களையே விரட்டிவிட்டார்கள். ஏனென்றால் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன். அந்த ஆட்சிக்கு பயந்து தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போனவர்கள் எவ்வளவோ பேர். நமது திராவிட மாடல் ஆட்சி தான், அவர்களை மீண்டும் அழைத்து தொழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். எப்படா முடியும் இந்த ஆட்சி என்று தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் காத்திருந்த நிலை தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியை எங்களுடைய ஆட்சி, எங்கள் வாழ்வை வளம்பெறக்கூடிய ஆட்சி, எந்நாளும் தொடர வேண்டும் என்று மக்கள் விரும்பும் லட்சிய ஆட்சியாக இந்த ஆட்சி விளங்குகிறது.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நான் மக்களோடு தான் இருக்கிறேன். தேர்தலுக்காக வருபவன் நான் அல்ல; உங்கள் தேவைகளை அறிந்து தீர்த்து வைப்பதற்காக எப்போதும் உடன் இருப்பவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மூன்று ஆண்டு ஆட்சியில் நிதி நெருக்கடி, திட்டமிட்ட அவதூறுகள், செயற்கையாக உருவாக்கப்படக்கூடிய தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல், எதிர்கால தமிழ்நாடு வளமான தமிழ்நாடு என திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான் என்று கலைஞர் சொன்னார். எத்தனை மிக மிக வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னார். என்னை பொறுத்தவரையில், மிக மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக இந்த ஸ்டாலின் ஆட்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எதிர்காலத்திலும் தொடரப்போகும் திட்டங்களால், வரலாற்றில் திராவிட மாடல் அரசும் அதை வழிநடத்துகின்ற ஸ்டாலின் பெயரும் அழிக்கமுடியாதபடி என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று கூறினார்.