publive-image

நடிகர் டெல்லி கணேஷ் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர். ரஜினி, கமல் முதல் இன்றைய தலைமுறை முன்னணி ஹீரோக்களுடைய படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக அண்மைக்காலமாக அதிமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாலும் கடந்த வருடம் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது உறக்கத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான டெல்லி கணேஷ் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து முத்திரை பதித்தவர். குறிப்பாக கமல்ஹாசன் திரைப்படங்களில் இவருக்கென ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் அமைந்திருக்கும். நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தமிழக முதல்வர் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் 'டெல்லி கணேஷின் மறைவு தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்' என தெரிவித்துள்ளார்.

publive-image

பல்வேறு பிரபலங்களும் அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''என்னைவிட மூன்று வயது சிறியவர். அவர் பட்டணபிரவேசம் முடிந்தவுடன் இரண்டாவது என்னுடன் 'மாரியம்மன் திருவிழா' என்ற திரைப்படத்தில் நடித்தார். சுஜாதாவிற்கு கணவனாக நடித்திருப்பார். அதில் நான் தம்பியாக நடித்திருந்தேன். அதன் பிறகு கமல் கூட நிறையப் படங்களில் அவர் நடித்திருக்கிறார். 'சிந்து பைரவி' கற்பனையே பண்ண முடியாத படம். நடுராத்திரியில் மது அருந்திவிட்டு என்னுடைய வீட்டில் மிருதங்கம் வாசிப்பார்.மறக்கவே முடியாத படம். வாழ்க்கையில் அவரைமறக்கவே முடியாது. ஒரு அற்புதமான ஒரு நடிகர். முழுதாக வாழ்ந்து விட்டார். அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும்'' என்றார்.

Advertisment