தலைநகர் டெல்லியில், காற்று மாசுபாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காற்று மாசுபாட்டால், குழந்தைகளின் சுகாதார நலனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காற்று மாசுப்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது கூட, அங்கு பட்டாசு வெடிக்க தடை விதித்திருந்தது. இருப்பினும், தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
டெல்லியில் நேற்று காலை 9 மணியளவின் போது காற்றின் தரம் மிக கடுமையாக இருந்தது. இந்த சீசனில் இதுவரை இல்லாத காற்றின் தரக்குறீயீடு நேற்று காலை 428ஆக பதிவானது. காற்றின் தரம் 421க்கு மேல் இருந்தால், மோசமானது என்று ஒன்றிய மாசுக் கட்டுபாட்டு வாரியம் வரையறைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் காற்றின் தரக்குறீயிடு 420ஐ கடந்துள்ளது. இந்த மோசமான நிலையால், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனால், மோசமான காற்றின் தரத்திற்கு எதிராக தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் மூன்றாம் நிலையை ஒன்றிய காற்று மேலாண்மை ஆணையம் அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை முதல் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, டெல்லியில் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுரங்கம், சாலை, போரிங், துளையிடும் பணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளில் அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்பட வேண்டிய செயல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனம், சிஎன்ஜி வாகனம், பி.எஸ்-VI டீசல் பேருந்துகள் இல்லாத பேருந்துகள் டெல்லியில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இயன்ற அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாடு விதிகள் அமலில் இருக்கும் வரை, டெல்லி மெட்ரோ ரயிலில் வழக்கமாக உள்ள 40 ட்ரிப்களுடன் கூடுதலாக 20 ட்ரிப்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.