குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத் அருகே உள்ள இந்திய எல்லை கடற்பரப்பில் 8 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட, இந்திய கடற்படையினர், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் குஜராத் காவல்துறையினர் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது படகில் வந்தவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 700 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 8 ஈரானியர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தில் ஓரே நாளில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடியின் போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வை கீழ் குஜராத்தில் நமது விசாரணை முகமைகள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து தோராயமாக 700 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியது. மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, இந்திய கடற்படை மற்றும் குஜராத் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை, தொலைநோக்குப் பார்வைக்கான நமது அர்ப்பணிப்புக்கும், அதனை அடைவதில் நமது ஏஜென்சிகளுக்கு இடையே உள்ள தடையற்ற ஒருங்கிணைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். எனவே மேற்கண்ட முகமை நிறுவனங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.