பீகார் மாநிலத்தில் பரவுனி என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் லக்னோ-பரவுனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்கை (COUPLING) பிரிக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரயில் ஒட்டுநர் ரயில் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்குப் பதிலாகப் பின்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ரயில் பெட்டிக்கும், ரயில் எஞ்சினுக்கும் இடையே எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் சிக்கிக் கொண்டார். இதில் அமர் குமார் ராவ் உடல் நசுங்கிப் பலியானார். இதனைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலிலிருந்து உடனடியாக இறங்கி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமர் குமார் ராவ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. பீகாரில் இரு ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி ரயில்வே ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.