Skip to main content

“விஜய் என்ன பரம யோக்கியரா?” - வரி ஏய்ப்பை பட்டியலிட்ட இராம சுப்பிரமணியன்

Published on 14/11/2024 | Edited on 14/11/2024
rama subramanian shares vijay's tax evasion

‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் முனைவர் இராம சுப்பிரமணியன், ஆட்சியில் இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் மீதான ஊழல் பட்டியலைத் துறை வாரியாக தொகுத்து ஆளுநரிடம் த.வெ.க. தலைவர் விஜய் தரப்போவதாகச் செய்திகள் வெளியாகின இது குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.  

விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். வருமான வரி கட்டுவதில் இந்தியாவிலேயே 2ஆம் இடத்தில் இருப்பதாக செய்திகள் வந்தன. ஊழல் பற்றிப் பேசும் அவர் தனிப்பட்ட முறையில் மோசமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். முதலில் அவர் கார் விவகாரத்தில் நுழைவு வரி கட்ட முடியாது என்று கூறினார். அதற்கு நீதிமன்றம் கண்டிப்பான முறையில் அபராதத்துடன் சேர்த்து வரி கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பிறகு அவர் வரி கட்டினார். வரி ஏய்ப்பு என்பது தேச விரோதம் என்று சட்டம் சொல்கிறது ஆனால் அவர் அந்த வரியைக் கட்டுவதற்கு முதலில் மனமில்லாமல் இருந்தார்.

இரண்டாவதாக சினிமாவுக்காக விஜய் ரூ.5 கோடியைப் பணமாக வாங்கியிருக்கிறார். முதலில் அந்த ரூ.5 கோடி வாங்கியதை அவர் ஒத்துக்கொண்டிருக்கிறார். ரூ.2 லட்சம் வரைதான் கையில் பணம் வாங்க முடியும். அதற்கு மேல் உள்ள தொகையைக் காசோலை மூலமாகவும் வங்கிக் கணக்கு மூலமாகவும் தான் வாங்க முடியும். இதுதான் முறை. ஆனால் விஜய் ரூ.5 கோடி பணத்தை கையில் வாங்கி இருக்கிறார். இதற்கு அபராதம் கொடுக்க வேண்டுமென நீதிமன்ற உத்தரவிட்டது.

மூன்றாவதாக ரூ.15 கோடியை வருமானத்தில் காண்பிக்கவில்லையென்று வருமானத் துறையினர் விஜய்க்கு ரூ.1 கோடிக்கு மேல் அபராதத்தையும் அதற்குரிய வரியையும் செலுத்த சொல்லியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் விஜய் வரி ஏய்ப்பு செய்து உண்மை என ஒப்புக்கொண்டார். ஆனால் காலதாமதமாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என என்று சட்டத்தின் வழியாகத் தப்பிக்க முயன்றார். 

இப்படித் தனிப்பட்ட வாழ்க்கையில் விஜய் தவறுகளைச் செய்திருக்கும்போது அவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும். விஜய் என்ன பரம யோக்கியரா? அவர் முதலில் யோக்கியர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்குப் பிறகு ஊழல் பட்டியல் போடலாம். அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுக்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால், விஜய் அதிகாரத்தில் வருவதற்கு முன்பே தனிப்பட்ட வாழ்கையில் தவறுகள் செய்திருக்கின்றார். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்வதாக ஆளுநரிடம் விஜய் சொன்னால் இதுபோன்று அவர் செய்த தனிப்பட்ட தவறுகளும் வெளியில் வரும் என்றார்.