Skip to main content

‘ஆதிக்கம் செலுத்தும் செ.பாலாஜி; பூஜ்ஜியமாகும் பா.ஜ.க. கனவு’ - இராம சுப்பிரமணியன்

Published on 14/11/2024 | Edited on 14/11/2024
rama subramanian interview

‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் முனைவர் இராம சுப்பிரமணியன், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

பா.ஜ.க. தலைவரால் தான் என்.டி.யே கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. பா.ஜ.க. தலைவர் தன்னை  எதிர்காலத்தில் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சொன்னது மட்டுமில்லாமல் மறைந்த பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அ.தி.மு.க. ஊழல் கட்சி என்றும் விமர்சித்திருந்தார். அ.தி.மு.க. கட்சியால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் சில இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது என்பது தெரிந்த விஷயம். அதே போல் ஒரு சில இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு உதவி செய்திருக்கலாம். பா.ஜ.க. கட்சியால் சிறுபான்மை மக்கள் ஓட்டு கிடைக்கவில்லை. அதனால்தான் அ.தி.மு.க. தோற்றது என்று அக்கட்சியினர் பலர் சொல்லிவிட்டனர். இந்த காரணத்தினால் எடப்பாடி ஒரு கூட்டத்தைக் கூட்டி பா.ஜ.க.வுடன்  ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது 2026 தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று அறிவித்தார்.

தற்போதைய பா.ஜ.க. தலைவர் வெளிநாட்டிலிருந்து வந்தாலும் மீண்டும் அவர் மாநிலத் தலைவர் ஆவாரா? என்பது கேள்விக் குறிதான். ஏனென்றால் நட்டாவின் தலைமை இந்த வருட இறுதியில் மாற்றப்படும். அதற்கேற்ப தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியிலும் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தற்போதைய தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரைக் கர்நாடகத்திற்கே மீண்டும் தள்ளிவிட வாய்ப்பிருக்கிறது. தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் கேட்க வேண்டும். போகமாட்டேன் என்று அவர் அடம்பிடித்தால் கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள். முக்கிய பிரச்சனை என்னவென்றால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சொல்லும் அளவிற்கு கிடையாது. கடந்த முறை அ.தி.மு.க. கட்சியால் பா.ஜ.க.-வுக்கு நான்கு எம்.எல்.ஏக்கள் வந்தார்கள். தற்போது இருக்கக் கூடிய சூழலில் வானதி சீனிவாசன் போன்றவர்கள் 2026ல் கண்டிப்பாக வெற்றி பெறவே முடியாது.

செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்ததால் அவருடைய ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அதை பா.ஜ.க.வால் எதிர்த்துப் போராட முடியாது. அதனால் மீண்டும் பூஜ்ஜியத்திற்கு பா.ஜ.க. தள்ளப்படும். மீண்டும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணக்கு காட்ட கூட்டணி வேண்டும். இல்லையென்றால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது. விஜய் கண்டிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டார். பா.ஜ.க.வுக்கு ஒரே ஒரு கூட்டணி வாய்ப்பு என்பது அ.தி.மு.க. கட்சிதான். ஆனால் அந்த கூட்டணியை வாயைவிட்டு முறித்துக்கொண்டனர். அ.தி.மு.க. தோற்றாலும் 21% கணிசமான வாக்குகளை வைத்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்கு சதவிகிதம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அக்கட்சியினர் கடுமையான உழைப்பை சட்டமன்ற தேர்தலில் போடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. கட்சியால்தான் சொல்லும்படியான வாக்கு விழுக்காடு பா.ஜ.க.விற்கு வந்தது. அதே போல் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். போன்றவர்களின் வாக்கு விழுக்காட்டை நீக்கினால் கண்டிப்பாக பா.ஜ.க.-விற்கு 5% வாக்கு விழுக்காடுக்கு மேல் இருக்காது. இந்த வாக்குகளை வைத்துக்கொண்டு பா.ஜ.க. வெற்றி பெற முடியுமா?.

அ.தி.மு.க. முன்னால் அமைச்சர்கள் மீது வழக்குகள் இருப்பதால் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறது. தே.மு.தி.க. கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்து வருகிறது. டெல்லி தலைமையிலிருந்து பா.ஜ.க. தலைவரை மாற்றுவதற்கான சிக்னல்கள் வந்ததால் மீண்டும் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியமைக்கலாம். ஒருவேளை விஜய் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி ஏற்படலாம். ஆனால், அதில் மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது. விஜய் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார். அதே போல் கூட்டணி ஆட்சி கான்செப்டை அ.தி.மு.க. ஏற்காது. ஒருவேளை கூட்டணியமைத்தால் அதில் பா.ஜ.க.வுக்கு இடம் இருக்காது. 2026 தேர்தலில் தி.மு.க.விற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்பில்லை. தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கண்டிப்பாக கூட்டணியிலிருந்து விலக வாய்ப்பிருக்காது என்றார்.