சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், எம்.பி, எம்.எல்.ஏக்கள் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏக்கள் தொடர்புடைய ஏராளமான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் பட்டியலிடப்பட்டது.
அதில் குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டில் அ.தி.மு.க சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அ.தி.மு.க அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.பி.சண்முகம் மனுத்தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்களின் நகல்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு தரப்பு வழக்கறிஞர் வினோத் ஆஜராகி, ‘300க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, 100 பேருக்கு மேல் முன் ஜாமின் பெற்றுள்ளனர். புலன் விசாரணை முன்னேற்றம் அடைந்து வருவதால் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி வேல்முருகன் கூறியதாவது, ‘கல்லூரி மாணவிகளை மனச்சாட்சி இல்லாமல் பஸ்ஸோடு எரித்த கட்சியினர், தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகிவிட்டனர். அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்ததும் இங்கு தான். திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இதே போன்ற நிலை தான் இருக்கிறது. இரண்டு கட்சிகளுக்கும் மக்களை பற்றிய அக்கறை இல்லை. சொந்த கட்சியை பற்றி மட்டுமே உங்களுக்கு அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை விசாரித்தால் மட்டும் போதுமா?. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காவல்துறையினர் அதே பணியில் இருக்கின்றனர். தேவையில்லாமல் காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், சிபிசிஐடி விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் வேண்டும்’ என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனுத்தாக்கல் செய்திருந்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ‘ தி.மு.கவும், அ.தி.மு.கவும் மாறி மாறி குறை கூறுகின்றதே தவிர நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரண்டு கட்சிகளுக்குமே இல்லை. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இருப்பை தக்கவைத்துக் கொள்ள இருதரப்பும் குறை சொல்கின்றன. இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல’ என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தி செல்லூர் ராஜூ மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.