Skip to main content

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை!

Published on 15/11/2024 | Edited on 15/11/2024
Central Minister Amit Shah's helicopter was searched by Election Commission officials

மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் மகா யுதி கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது.

இந்த தேர்தலில், ஆட்சியை பிடிக்க வேண்டும் என மகா விகாஸ் அகாடி கூட்டணியும் , மகா யுதி கூட்டணியும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில், அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் பையை அதிகாரிகள் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது . 

யவத்மால் பகுதியில், தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த உத்தவ் தாக்கரேவின் பைகளை தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது, ‘பிரதமர் மோடி, அமித்ஷா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரின் பைகளையும் சோதனை செய்வீர்களா?’ என்று உத்தவ் தாக்கரே, அந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். உத்தவ் தாக்கரேவின் பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்வது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், ஹிங்கோலி தொகுதியில் பரப்புரைக்கு சென்ற போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இது தொடர்பான வீடியோவை, மத்திய அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘இன்று, மகாராஷ்டிராவின் ஹிங்கோலி சட்டமன்றத் தொகுதியில் எனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​எனது ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேர்மையான தேர்தல் மற்றும் ஆரோக்கியமான தேர்தல் முறையை பா.ஜ.க நம்புகிறது. தேர்தல் ஆணையம், அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறது. ஆரோக்கியமான தேர்தல் முறைக்கு நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும். இந்தியாவை உலகின் வலிமையான ஜனநாயகமாக வைத்திருப்பதில் நமது கடமைகளைச் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்