உத்திரப் பிரதேச மாநில அரசு சிவில் சர்வீஸ் தேர்வு டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரண்டு ஷிப்டுகளாக நடைபெறவுள்ளதாக ஏற்கெனவே உத்தரப்பிரதேச பா.ஜ.க அரசு அறிவித்திருந்தது. அதே போல், ஆய்வு அலுவலர் மற்றும் உதவி ஆய்வு அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு முதற்கட்ட தேர்வு டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூன்று ஷிப்டுகளாக நடைபெற இருந்தது. ஆனால், போட்டித் தேர்வுகளை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை மாநில அரசு ஏற்காகததால், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPPSC) எதிராக அம்மாநில தலைநகர் பிராக்ராஜில் போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மாநில அரசு சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளை வெவ்வேறு ஷிப்டுகளில் நடத்துவது மற்றும் மதிப்பெண்கள் மதிப்பிடும் போது பின்பற்றப்படும் இயல்பாக்குதல் (normalisation) முறையைப் பயன்படுத்தல் போன்றவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விண்ணப்பதாரார்களின் கோரிக்கைக்களை மாநில அரசு ஏற்று, சிவில் சர்விஸ் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து யுபிபிஎஸ்சி (UPPSC) கமிஷன் செயலர் அசோக் குமார், போராட்டம் நடத்தி வரும் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் அறிவித்தார். அதில் அவர் கூறியதாவது, “கடந்த சில மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டித் தேர்வுகளில் பல தாள் கசிவு சிக்கல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதை மனதில் வைத்து, போட்டித் தேர்வுகளின் புனிதத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுடன் பல ஷிப்டுகளில் தேர்வுகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டது.
ஆனால், கடந்த சில நாட்களாக, மாணவர்கள் எழுப்பிய கோரிக்கையை , முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க ஆணையத்திற்கு உத்தரவிட்டார். அதனால், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று கமிஷன் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.