கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
இதற்காக வெளிநாடுகளில் சென்று சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். அவரின் உடல்நிலை காரணமாக வழக்கமான அலுவல் பணிகளில் அவர் ஈடுபடாமல் இருக்கிறார்.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ பிரான்ஸிஸ் டி சோசா சமீபத்தில் மரணமடைந்தார். இவரது மறைவையடுத்து பாஜகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆட்சி அமைக்க உரிமை கோரி காங்கிரஸ் கட்சி, ஆளுநர் மிருதுளா சின்காவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க கோவா விரைந்துள்ளனர். மனோகர் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதலமைச்சரை முடிவு செய்யும் பணியில் பாஜக மூத்த நிர்வாகிகள் ஈடுபடுவார்கள் என தகவல்கள் பரவுகின்றன. மேலும் இன்று மாலை பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.