சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கிற உரிமையை வழங்கியது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது ஆதரவைப் பெற்றிருந்தாலும், கேரள மாநிலத்தில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கேரள அரசும், கேரள தேவஸ்வம் போர்டும் இதில் மேல்முறையீடு செல்லப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்ட நிலையில், போராட்டம் வலுத்து வருகிறது. இதற்கிடையில் வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியான. இந்த சமயத்தில், சபரிமலை செல்ல இருப்பதாக பெண்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகர் துளசி என்பவர், சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை இரண்டு துண்டாக வெட்டிப்போட வேண்டும் என பேசியது சர்ச்சையானது. அவர்மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. அதேபோல், அக் 17, 18 தேதிகளில் எங்கள் பெண் செயற்பாட்டாளர்கள் பம்பை ஆற்றுக்கு அருகில் கூடுவார்கள். இளம்பெண் யாராவது சபரிமலைக்குள் நுழைய முற்பட்டால் அவர்கள் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொள்வார்கள் என கேரள மாநிலம் சிவசேனாவைச் சேர்ந்த பெரிஞ்சமல்லம் அஜீ என்பவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.