
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு இதன்மூலம் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதிகளை மத்திய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று(20.02.2025) கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சமூக ஊடகங்கள் மூலம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக அறிந்தேன். அவர் கடிதத்தை நல்ல எண்ணத்தில் எழுதவில்லை. அந்தக் கடிதத்தின் மூலம் அவர் சில கற்பனையான கவலைகளைக் குறிப்பிட்டுள்ளார், மேலும் அவரது கடிதம் அரசியல் உந்துதல் நிறைந்துள்ளது, மேலும் அவரது சொந்த அரசியல் வசதியைக் கருத்தில் கொண்டு, அவர் அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். உலகளாவிய தேவையை கருத்தில் கொண்டு, புதிய உயரங்களை நோக்கி இந்தியா முன்னேறுவதை கருத்தில் கொண்டு, 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ஐ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 இல் முதன்மையான சாராம்சம் கல்விக்கு உலகளாவிய தரத்தை கொண்டு வருவதாகும். ஒருபுறம், நமது லட்சியம் உலகளாவியதாக இருக்க வேண்டும், உலகளாவிய தரத்தைக் கொண்டிருக்க வேண்டும், அதே நேரத்தில் அது இந்திய நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், அது வேரூன்ற வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழி போன்ற மாநிலங்களின் மொழியியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை இது ஊக்குவிக்க வேண்டும். இந்திய அரசு இந்தியாவின் 13 முக்கிய மொழிகளிலும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அவற்றில் ஒன்று தமிழ். அந்தந்த மாநில மாணவர்கள் மீது எந்த மொழியையும் திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை. எந்த வகையிலும், தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை பரிந்துரைக்கவில்லை. எனவே இந்தி திணிக்கப்படுவதாக இது போன்ற தவறான தகவல், பொய்யை பொறுப்பான நபர்களிடமிருந்து பரப்பக்கூடாது. தமிழ்நாட்டின் மொழி மற்றும் பாரம்பரியத்தை பெருமைப்படுத்துவதில் பிரதமர் மோடியின் அரசு உறுதிபூண்டுள்ளது.

1968 முதல், அடுத்தடுத்த அரசாங்கங்கள் கல்வித் துறையில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் நிலைப்பாடு எனக்குத் தெரியும். அதை நான் மதிக்கிறேன். ஆனால் நாம் அந்நிய மொழியை நம்பியிருக்கக் கூடாது. அந்நிய மொழியை அதிகமாகச் சார்ந்திருப்பது தீர்வல்ல. தேசிய கல்விக் கொள்கை 2020ஐ செயல்படுத்தாமல், நமது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உலகளாவிய மற்றும் அகில இந்திய வாய்ப்பை இழக்கிறோம். மாணவர்களை மையமாகக் கொண்ட எதிர்காலத்தை மையமாகக் கொண்ட கொள்கையை நிராகரிப்பது பிற்போக்குத்தனமாகும். கல்வியை அரசியலாக்கக் கூடாது. தவறாக சித்தரிக்கப்பட்டவை எதையும் தீர்க்கப் போவதில்லை. அறிவியல் கல்வியில் கவனம் செலுத்தும் பி.எம். ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளை செயல்படுத்தாததால் தமிழ்நாடு ரூ.5000 கோடியை இழக்கிறது. அரசியல் வேறுபாட்டைக் கடந்து, திறந்த மனப்பான்மையுடன் செயல்பட நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனப் பேசுயுள்ளார்.