
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பு வகித்து வருகிறார். கடும் போட்டிக்கு இடையில், கமிட்டி தலைவராக செல்வபெருந்தகையை நியமிக்கப்பட்டு ஒராண்டுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில், செல்வப்பெருந்தகையை கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றக் கோரி தமிழ்நாடு மாவட்டத் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சமீபத்தில் புதிய நிர்வாகிகளை செல்வப்பெருந்தகை நியமித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், செல்வப்பெருந்தகைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது. அதனால், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தியை தமிழ்நாடு மாவட்டத் தலைவர்கள் 25 பேர் நேற்று சந்தித்து செல்வப்பெருந்தகை தொடர்பாக முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் அதிருப்தி மாவட்டத் தலைவர்கள், இன்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளனர். அதனால், 25 மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.