Skip to main content

“நீ யாருடா” - ராஜு முருகன் கேள்வி

Published on 19/02/2025 | Edited on 19/02/2025
raju murugan speech in Gentlewoman Audio Launch

ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜென்டில்வுமன்’. கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுகபாரதி வசனங்கள் மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  

ad

இதில் படக்குழுவினருடன் இயக்குநர் ராஜு முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பெண்கள் குறித்தான இந்த சமூக பார்வை குறித்து பேசினார். அவர் பேசியதாவது, “ஜோஷ்வா சென்சார் சமயத்தில் எனக்கு ஃபோன் செய்தார். நிறைய கட் செய்துவிட்டார்கள் என்று சொன்னார். சென்சாருக்கென்று எனக்கு ஒரு அகராதியே உருவாக்கி வைத்திருக்கிறேன். அந்த டிக்‌ஷ்னரியை புரட்டி பார்த்து இதையெல்லாம் பண்ணு என ஜோஷ்வாவுக்கு சொன்னேன். இன்றைக்கு இருக்குற மிகப் பெரிய பிரச்சனை புனிதப்படுத்துதல். இருக்குறதுலையே ரொம்ப ஆபத்தான ஆட்கள் ‘நான் உன்னை சமமாக நடத்துவேன்’ என சொல்பவன் தான். ‘என் பொண்டாட்டிய சமமாதான நடத்துறேன், நான் சாதியே பார்க்கிறது இல்ல, நான் எங்க வீட்டுல எல்லாத்தையும் அனுமதிப்பேன்... இப்படி சொல்பவன் தான் ரொம்ப ஆபத்தான ஆள். நீ யாருடா அத பண்ணுவதற்கு... அதுதான் கேள்வி.

விஞ்ஞானத்தில், அறிவியலில், டிஜிட்டல் மையமாக்கப்பட்ட இந்த உலகத்தில் எவ்வளவோ கடந்து வந்துவிட்டோம். ஆனால் தனிமனித, அரசியல் உணர்விகளில் நாம ரொம்ப தேங்கி போய்ட்டோம். அக்கினிப் பிரவேசம் நாவலை ஜெயகாந்தன் என்னைக்கோ எழுதிவிட்டார். பூட்டாத பூட்டுக்கள் படத்தை மகேந்திரன் என்னைக்கோ எடுத்துவிட்டார். அவள் அப்படித்தான் படத்தை ருத்ரய்யா எப்பவோ எடுத்துவிட்டார். அதில் இருந்து அடுத்த படிக்கு நாம வரவேயில்லை. சொல்லப்போனால் அதில் இருந்து பின்னாடி தான் போய் கொண்டிருக்கோம். இன்னைக்கு ஒரு பெண் குறித்தான வசனத்தை வைக்க முடியவில்லை. யாரெல்லாம் தங்களை பண்பாட்டு, கலாச்சார காவலர்கள் என பிரகடனப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாருமே இந்த புனிதப்படுத்துதலின் பிரதிநிகளாக இருந்து கொண்டு உள்ளுக்குள் மிகப்பெரிய அளுக்கை வைத்திருப்பவர்கள். அவர்கள் தான் இந்த இந்திய சமூகத்துக்கு மிகப் பெரிய எதிரிகள். அதை கட்டுடைப்பது மிக இயல்பாக இருக்க வேண்டும். பெண்களை ஏன் கடவுளாக பார்க்க வேண்டும். அவர்களை முதலில் மனிதராக பாருங்கள்” என்றார்.   

சார்ந்த செய்திகள்