புதிய கட்சியை துவங்கியுள்ள கமல்ஹாசன், மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, ரசிகர் மத்தியில் தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கட்சியின் கொள்கை குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்தார்.
இதனை தொடர்ந்து தொண்டர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச திட்டம் நீடிக்குமா?
எனது ஆட்சியில் இலவசம் இருக்காது, தகுதி மேம்படுத்தப்படும். வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். குவாட்டரும், ஸ்கூட்டரும் இருக்காது. மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள் ?
இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன் இனிமேல் உங்கள் இல்லங்களில்.
ஊழலை நீங்கள் ஒழிப்பீர்களா?
நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது, நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம். ஊழலை ஒழிக்க தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தியாகம் செய்ய வேண்டும்.
கஷ்டம் வந்ததால் விஸ்வரூபம் எடுத்தீர்களா?
விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரை எடுத்துவிட்டேன் (சிரித்துக்கொண்டே).
நிஜ வாழ்க்கையில் மக்களின் நிலையை கண்டு இனிமேல்தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம்.
உங்கள் வழிகாட்டி யார்?
பகுத்தறிவுவாதி என என்னை கேலி செய்வார்கள், ஆனால் அதுதான் உண்மை. காந்தி, அம்பேத்கர், நேரு, கெஜ்ரிவால், சந்திரபாபு, பினராயி விஜயன், ஒபாமைவையும் பிடிக்கும்.
நீங்கள் இடதா வலதா?
நேற்று என்னிடம் பேசிய ஆந்திர முதல்வர் கூறினார், 'இசங்களெல்லாம் பிறகுதான். மக்கள் நலனே முக்கிய'மென்று. நான் இடதுமல்ல வலதுமல்ல, மக்கள் நலனுக்கு எது தேவையோ அந்தப் பக்கம் செல்வேன். அதனால் தான் 'மய்யம்' என்று பெயர் வைத்துள்ளேன்.
எத்தனை நாள் தாக்குபிடிப்பீர்கள்?
நான் ஏற்கனவே கூறிவிட்டேன். இனி என் வாழ்க்கை முழுவதும் இதில் தான் என்று. சிலர் என் வயதைக் கிண்டல் செய்கிறார்கள், குறைவான ஆயுள் கொண்டவர்கள் என் வயதைக் கிண்டல் செய்கிறார்கள். நான் நூறு வயது வரை ஆள வேண்டுமென்று நினைக்கவில்லை. எனக்கு 64 வயசு ஆகுது. இனி எஞ்சி உள்ள வாழ்வு உங்களுக்குத்தான், தமிழ் மக்களுக்குத்தான்.
போன்சாய், மரபணு விதை என்று கூறுகிறார்களே?
எல்லா செடிகளும் போன்சாய் செடிகள் தான். விதைகள் நன்றாக முளைக்கும் போது கமிஷனுக்கு ஆசைப்பாட்டால் அனைத்து விதைகளும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான்
உங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு வருவார்களா?
என் பெண்கள் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இவர்கள் (தொண்டர்களை பார்த்து) எனது பிள்ளைகள். அவர்கள் அரசியலுக்கு வந்து விட்டார்கள்.
தமிழை காக்க என்ன செய்வீர்கள்?
உங்கள் பேச்சு வழக்கில் தமிழ் இருந்தால் தமிழ் வாழும் என அவர் கூறினார்.