
மகாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணியில், அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் இருந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், மகாயிதி கூட்டணி கட்சித் தலைவர்களான சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் சிவசேனா தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க மீது அதிருப்தி இருப்பதாக தகவல் வெளியானது. தலைமை பதவி மறுக்கப்பட்டதால் ஏக்நாத் ஷிண்டே, அதிருப்தி இருப்பதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக கூட்டணி தலைவர்கள் மீது கருத்து வேறுபாடு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விடுத்த ஒவ்வொரு அழைப்புகளையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஏக்நாத் ஷிண்டே புறக்கணித்து வருகிறார்.
அதே நேரத்தில், உத்தவ் தாக்கரே அணியில் இருந்து வந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏகளுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு போலீஸ் பாதுகாப்புகள் வழங்கப்பட்டது. அந்த பாதுகாப்பை, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறைத்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் அதே போன்று பாதுகாப்பை குறைத்தாலும், ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏக்களுக்கு அதிக அளவில் பாதுகாப்பு நடைமுறையை தேவேந்திர பட்னாவிஸ் குறைத்துள்ளார். இது மேலும் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவருக்கும் விரிசல் ஏற்பட்டு வருவதாக ஊகங்கள் இருந்து வரும் நிலையில், தன்னை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார். கடந்த முறை ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்தபோது ரூ.900 கோடி மதிப்பிலான ஜல்னா திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை தற்போது தேவேந்திர பட்னாவிஸ் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் ஒரு சாதாரண கட்சித் தொண்டன், ஆனால் நான் பாலா சாஹேப்பின் தொண்டனும் கூட. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022 இல் நான் இலகுவாக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நான் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்தேன். சட்டமன்றத்தில் எனது முதல் உரையிலேயே, தேவேந்திர ஃபட்னாவிஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவார் என்று நான் கூறினேன், எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்தன. அதனால்தான் என்னை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காக இது திட்டமிடப்பட்டுள்ளது என்பது மக்களுக்குப் புரியும்” என்று கூறினார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை பிளவுப்படுத்தியும் மகா விகாஸ் கூட்டணி ஆட்சியை கலைத்தும், கடந்த 2022 ஆம் ஆண்டு 40 எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே புதிய அரசை உருவாக்கி முதலமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.