
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதே சமயம் அமெரிக்காவில் உள்ள முக்கியத்துறைகளில் தற்போதைய தலைவர்கள் மாற்றப்பட்டு புதியதாகத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற உளவு அமைப்பான எப்.பி.ஐ.யின் (FBI - Federal Bureau of Investigation) தலைவராக யார் நியமிக்கப்பட உள்ளார் என்று அந்த நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதே சமயம் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான காஷ் பட்டேல் எப்.பி.ஐ.வின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதிபர் ட்ரம்ப் சொன்னால் எதையும் செய்யக் கூடியவர் காஷ் பட்டேல் என்று கூறப்படுகிறது. இவர் பாதுகாப்புத் துறையில் டிரம்பிற்கு வலதுகரமாக திகழ்ந்து வந்தவர் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக காஷ் பட்டேல் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றியவர் ஆவார். ட்ரம்ப் அதிபராக பணியாற்றிய போது அவரின் பாதுகாப்புத்துறை சார்ந்த முக்கிய செயல்பாடுகளில் கஷ்யப்பட்டேல் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். இவரின் மூதாதையர்கள் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காஷ் படேலை 9வது எப்.பி.ஐ இயக்குநராக உறுதிப்படுத்தும் ஆணையத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உதவியாளரும், வெள்ளை மாளிகை துணைத் தலைவருமான டான் ஸ்கேவினோ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எப்.பி.ஐ இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டிருப்பது, அதிபர் டிரம்பின் நேர்மையை மீட்டெடுப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உள்ள நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும்.
எப்.பி.ஐ அமெரிக்க மக்களுக்கு சேவை செய்யும் மற்றும் அதன் முக்கிய நோக்கமான நீதியை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் செயல்படுத்துவதில் மீண்டும் கவனம் செலுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ் படேல் எப்.பி.ஐ இயக்குநராக நியமிக்கப்பட்ட பிறகு, எப்.பி.ஐ.யை வெளிப்படையானதாகவும், பொறுப்புணர்வுடனும் மாற்றுவதாக உறுதியளித்துள்ளார். அதே சமயம் அமெரிக்க அரசின் திறன் துறையின் (DOGE) தலைவரும் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராக உறுதிப்படுத்தப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.