
தலைநகர் டெல்லியில் கடந்த 5 ஆம் தேதி ஒரே கட்டமாக 70 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலில் தனித்து களம் கண்டது. இதனால் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனை போட்டி ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 48 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
கடந்த 10 வருடங்களாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, வெறும் 22 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெறாமல் பெரிய அளவில் தோல்வியைச் சந்தித்தது. இத்தகைய சூழலில் தான் டெல்லி பா.ஜ.க பார்வையாளர்கள் ரவிசங்கர் பிரசாத், தன்கர் முன்னிலையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (19.02.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரேகா குப்தா டெல்லி முதலமைச்சராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா இன்று (20.12.2025) மதியம் 12.30 மணியளவில் பதவியேற்றார். இதன் மூலம் டெல்லியின் 4வது பெண் முதலமைச்சர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லியின் புதிய அமைச்சர்களாக பர்வேஷ் சாஹிப் சிங் (துணை முதலமைச்சர்), ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர் இந்திரஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகிய 6 பேர் பதவியேற்றனர்.
துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா புதிதாகப் பொறுப்பேற்ற முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் பதவியேற்பு உறுதி மொழியும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவிற்குப் பின்னர் பாஜக எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய் கூறுகையில், “பதவியேற்பு விழா வெற்றிகரமாக முடிந்தது. இனி வளர்ச்சியடைந்த டெல்லியை உருவாக்கும் என்ற எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்தார். பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித் மற்றும் ஆம் ஆத்மியின் அதிஷி ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் 4 வது பெண் முதலமைச்சர் ரேகா குப்தா ஆவார்.