Published on 11/05/2018 | Edited on 11/05/2018
விருதுநகரில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்காக வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார்.
பின்னர் அங்கிருந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர், ஆட்சியர் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் இல்லத்தில் வைத்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை வாங்கினார். அப்போது அங்கு பத்திரிகையாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பத்திரிகையாளர்கள் வெளியே காத்திருந்தனர்.
அப்போது, பொதுப்பணித்துறை விருந்தினர் இல்லத்தில் இருந்து பெரும் சத்தத்துடன் பொதுமக்களின் சலசலப்பு சத்தம் கேட்கவே பத்திரிகையாளர்கள் உள்ளே சென்றனர். அப்போது பொதுமக்கள் ஆவேசமாக ஆளுநர் ஏன் வெளியில் வந்து மனுவை பெறவில்லை என கேள்வி எழுப்பி கூச்சல் போட்டனர். மேலும் ஆளுநர் தங்கள் குறைகளை முறையாக கேட்க தவறியதகாவும், இதற்கு தாங்கள் ஆட்சியரிடமே புகார் மனுக்களை அளித்திருப்போம் என கூச்சலிட்டனர். இதனிடையே அங்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், பத்திரிகையளர்களை வெளியே செல்லுமாறு கூறினார்.
அப்போது பத்திரிகையாளர்கள் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பத்திரிகையாளர்கள் காவல்துறையினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் எந்த பதிலும் தெரிவிக்காமல் வலுக்கட்டாயமாக பத்திரிகையாளர்களை அப்புறப்படுத்தினர். இதனால் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் பதட்டமாக காணப்பட்டது.