Skip to main content

“பட்ஜெட்டும் ஹிட்; தமிழும் ஹிட்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Published on 16/03/2025 | Edited on 16/03/2025

 

CM MK Stalin is proudly says Budget is a hit Tamil is a hit

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. முன்னதாக தமிழக அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கடந்த 13ஆம் தேதி(13.03.2025)  வெளியிட்டார். பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசு வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

அதோடு பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் (₹) என்ற அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாகத் தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதைக் குறிக்கும் வகையில் இலச்சினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இது இந்திய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. மற்றொரு புறம் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கேள்விகளுக்குக் காணொளி வாயிலாகப் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் இன்று (16.03.2025) ‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? எனக் கேள்வியுடன் தமிழக பட்ஜெட் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காணொளியில், “தமிழ்நாடு பட்ஜெட் லோகோவை வெளியிட்டு இருந்தேன். மொழிக் கொள்கைகளில் எந்த அளவு உறுதியாக உள்ளோம் என்று காட்ட அதில் ‘ரூ’ என்று வைத்திருந்தோம். அவ்வளவுதான். ஆனால் தமிழைப் பிடிக்காதவர்கள் அதைப் பெரிய செய்தி ஆக்கிவிட்டனர். ஒன்றிய அரசிடம் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளத்தைத் தாருங்கள். பேரிடர் நீதி தாங்கள். பள்ளிக் கல்வி நிதியை விடுவியுங்கள் என்று தமிழ்நாடு சார்பாக 100 கோரிக்கைகள் வைத்திருப்பேன். அதற்கு எல்லாம் பதில் பேசாத மத்திய நிதி அமைச்சர் இதைப் பற்றிப் பேசி உள்ளார். அவரே பல பதிவுகளில் ‘ரூ’ என்றுதான் வைத்துள்ளார். ஆங்கிலத்திலும் எல்லோரும் ருபீஸ் (RUPEES) என்பதை எளிதாக ஆர்.எஸ். (Rs) என்று தான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாகத் தெரியாதவர்களுக்கு இதுதான் பிரச்சினையாகத் தெரிகிறது போல. மொத்தத்தில் இந்திய அளவில் நம்ம பட்ஜெட்டும் ஹிட்; தமிழும் ஹிட்” எனப் பேசியுள்ளார். 

சார்ந்த செய்திகள்