
நடப்பாண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (14-03-25) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்யவுள்ளார். நாளை மறுநாள் (15-03-25) வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். 2025-2026 ஆண்டுக்கான முன்பணம் மானிய கோரிக்கை, கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை ஆகியவை மார்ச் மாதம் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கை தொடர்பான காட்சிகளை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், 2025-2026 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13-03-25) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல்முறையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரூபாய் (₹) என்ற அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாக தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை குறிக்கும் வகையில் இலச்சினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்தி..’ என்று கூறியிருப்பதோடு பட்ஜெட்டை குறிப்பிட்டு ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனும் தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ரூபாய் (₹) என்ற அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாக தமிழ் எழுத்தான ‘ரூ’ எழுத்தை முதன்மைப்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். மேலும், மத்திய பா.ஜ.க அரசு மும்மொழி கல்விக் கொள்கை என்று கூறி மறைமுகமாக இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது என்று தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மொழி தொடர்பான சர்ச்சை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக பட்ஜெட் இலச்சினையில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தி ‘ரூ’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.