
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆரோக்கியசாமி வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தஞ்சை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆரோக்கியசாமியை தொடர்பு கொண்டு கடனாக ரூ.15 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ஆரோக்கியசாமி, “எனக்கு மனைவி இல்லை, தனியாகத்தான் இருக்கிறேன்; நான் பணம் தருகிறேன்; ஆனால் எனக்கு நீ பணத்தைத் திருப்பி தர வேண்டாம். அதற்கு பதில் நீ என்னிடம் தனிமையில் இருந்தால் போதும்” என்று அநாகரீகமாகப் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “நான் அந்த மாதிரி ஆள் இல்லை; இப்படிதான் பணம் கொடுப்பீர்கள் என்றால் எனக்கு அந்த மாதிரியான பணம் தேவையில்லை” என்று சட்டெனத் தொலைப்பேசி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த பெண்ணிற்கு போன் செய்த ஆரோக்கியசாமி, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்; நான் உனக்கு பணம் கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார். அந்த பெண்ணே மன தைரியத்துடன், “சரிங்க சார்; நான் வீட்ல தான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். அதன்பின்னர் பெண்ணின் வீட்டிற்கு வந்த ஆரோக்கியசாமி, திடீரென கட்டிப்பிடித்து அத்துமீறி உள்ளார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பெண், அவரை தட்டிவிட்டு அவரிடம் இருந்து விலகிச் சென்றுள்ளார். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அந்த பெண் செல்போனில் வீடியோவை ஆன் செய்து அறையில் ரகசியமாக வைத்திருக்கிறார். ஆனால் இது எதுவும் தெரியாமல் ஆரோக்கியசாமி தொடர்ந்து பெண்ணிடம் அத்துமீறியுள்ளார்.
அந்த வீடியோவில், “வாம்மா, வந்து என் பக்கத்துல உட்காரு..” என்று கூற, அந்த பெண்ணோ, “சார் நான் உங்ககிட்ட என்ன கேட்டேன்? பண உதவி வேணும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, திருப்பி தந்திடுறேன் என்று தானே கேட்டேன். ஆனால் நீங்க இப்படி அத்து மீறலாமா?” என்று கேட்டுள்ளார். ஆனால், அரோக்கியசாமியோ, “நீ பணம் எல்லாம் ஒன்னும் தர வேண்டாம். இது உனக்கு அன்பளிப்பு..” என்று அத்துமீறுவதிலேயே குறியாக இருந்துள்ளார். அதன் பின்னர், “எனக்கு அன்பளிப்பு எல்லாம் வேண்டாம்” என்று அந்த பெண் கூற, அதனையெல்லாம் பொருட்படுத்தாத அந்த ஆரோக்கியசாமி திடீரென பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
இந்த வீடியோ ஆதாரங்களை கொண்டு பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதுபோன்று கடனுக்கு பணம் கேட்கும் பல பெண்களிடம் ஆரோக்கியசாமி அத்துமீறி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.