
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். கோரோனா காலகட்டத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா பட வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இந்திய ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார்.
கடந்த வருடம் இவர் ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்தது. இது புஷ்பா 2 பட காட்சி என்றும் இதன் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் புஷ்பா 2 படம் கடந்த டிசம்பரில் வெளியான நிலையில் அதில் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து அவர் தெலுங்கு நடிகர் நிதின் நடித்துள்ள ‘ராபின்ஹுட்’ படம் மூலம் இந்திய திரைத்துறையில் அறிமுகமாகவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் சமீபத்திய ஒரு பட விழாவில் தெரிவித்திருந்தார். மேலும் டேவிட் வார்னர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் இந்திய சினிமாவில், அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்வதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ‘ராபின்ஹுட்’ பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டேவிட் வார்னர் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த டேவிட் வார்னர், “இந்திய சினிமாவே, இதோ நான் வருகிறேன். ராபின்ஹுட் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் படப்பிடிப்பை முழுமையாக என்ஜாய் பண்ணிணேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை வெங்கி குடுமுலா இயக்கியிருக்க நிதினுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகிறது.