
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், சாயாதேவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரமசிவன் பாத்திமா'. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் ஆகியோரால் அவர்களின் எக்ஸ் வலைதளப்பக்கங்களில் வெளியிடப்பட்டது.
டிரெய்லரை பார்க்கையில், சுப்ரமணியபுரம் என்கிற இந்து கிராமத்தில் இருக்கும் விமலும் யோக்கோபுரம் என்கிற கிறிஸ்துவ கிராமத்தில் இருக்கும் சாயாதேவியும் காதலிக்கின்றனர். இவர்களின் காதலுக்கு இரண்டு கிராமமும் எதிர்ப்பு தெரிவிக்க இதனால் காதலர்கள் ஊரைவிட்டு ஓடிப்போகின்றனர். இருவரையும் காவல் துறையினர் தேடும் போது அவர்கள் ஊரைப் பற்றி விசாரிக்கையில் இரு கிராமத்திற்கும் இருக்கும் மோதல் போக்கு, மதம் மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் தெரியவருகிறது. இறுதியில் காதலர்களைக் கண்டுபிடித்தார்களா, காதலர்கள் என்ன ஆனார்கள் என்பதை விரிவாகச் சொல்லியிருக்கும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.
சர்ச்சைக்குறிய விஷயத்தை இந்தப் படம் பேசுவதால் டிரெய்லரில் வரும் காட்சிகளும் வசனங்களும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி பாதிரியாராக வரும் எம்.எஸ்.பாஸ்கரிடம், சுப்ரமணியபுரம் ஆளுங்க எப்படி எனக் கேட்க, ‘முரட்டுத்தனமான ஆளுங்க, ஆனா ஊனா வெட்டுக்குத்துன்னு இறங்குறாங்க’ என்கிறார். பின்பு யோக்கோபுரம் ஆளுங்க எப்படி என்ற கேள்விக்கு, ‘படிச்ச பிள்ளைங்க. எதிராளியக்கூட மன்னிக்ககூடியவங்க’ என்கிறார். பின்பு மற்றொரு இடத்தில் இரண்டு கிராமத்திற்கும் கலவரம் நடந்த போது ஒரு முஸ்லீம் நபர் காரணம் என்ற ரீதியில் ஒரு காட்சி இடம் பெறுகிறது.
மேலும் விமல் ஒரு காட்சியில், ‘பெளிக்ஸ் மாதிரி ஆளுங்க கிட்ட பணத்த கொடுத்து மதம் மாத்த சொல்றீங்க. மாறுனவனும் மாறாதவனும் சண்டை போட்டுக்கிட்டா அதுக்கு பேரு மதக்கலவரம்னு சொல்றீங்க’ என்கிறார். அதே போல் இன்னொரு இடத்தில் விமலிடம் எம்.எஸ்.பாஸ்கர், ‘வெள்ளைக்காரங்க இங்க வரலைன்னா நீங்க பிச்சதான் எடுத்துட்டு இருக்கனும்’ என சொல்ல அதற்கு விமல், ‘அந்த வெள்ளைக்காரனே இங்க பிச்ச எடுக்கத்தான் வந்தான். என்னையெல்லாம் மாத்த முயற்சி பண்ணாத’ என பதிலளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
டிரெய்லரின் இறுதி காட்சியில், காவல் அதிகாரி எம்.எஸ்.பாஸ்கரிடம், ‘எல்லாத்தையும் மன்னிக்கிற யோக்கோபுரம் ஏன் சுப்புரமணியபுரத்த மன்னிக்கக்கூடாது’ எனக் கேட்க, அதற்கு எம்.எஸ்.பாஸ்கர், ‘அவனுங்க சரியாந்திர காட்டு மிராண்டிங்க சார். முன்னொரு காலத்துல வெள்ளக்காரவன் வந்து சர்ச் கட்டுனப்ப உள்ளுக்குள்ள வந்து மாரியம்மன் சிலையை வச்சிட்டு போய்ட்டாங்க. அதுக்கப்புறம் மாரியம்மன மேரியம்மனா கும்பிட்டுட்டு இருக்கோம்’ என பதிலளிக்கிறார். இந்த டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் விவாதங்களும் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் முன்பு எடுத்த தமிழ்க்குடிமகன் படத்தில் குலத்தொழில், சாதி உள்ளிட்ட விஷயங்களை பேசியிருந்த நிலையில் அந்தபடமும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.