Skip to main content

அவுரங்கசீப் கல்லறை இடிப்பு?; சர்ச்சையைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் திட்டம்!

Published on 11/03/2025 | Edited on 11/03/2025

 

following controversy Devendra Fadnavis' plan Demolition of Aurangzeb's tomb

மகாராஷ்டிரா மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சித் தலைவராக பொறுப்பு வகித்து வரும் எம்.எல்.ஏ அபு ஆஸ்மி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது 17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்று பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர், “அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார். ஔரங்கசீப்பை ஒரு கொடூரமான நிர்வாகியாக நான் கருதவில்லை.  சத்ரபதி சம்பாஜி மகாராஜுக்கும், அவுரங்கசீப்புக்கும் இடையிலான போர் மாநில நிர்வாகத்திற்கான ஒரு போராக இருந்தது. அந்தப் போர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களைப் பற்றியது அல்ல. அவுரங்கசீப் படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர்” என்று புகழ்ந்து பேசியிருந்தார். இது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கள் சர்ச்சையானதை தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய அபு ஆஸ்மி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கண்டனம் தெரிவித்தார். அபு ஆஸ்மி மீது காவல் நிலையங்களில் புகார்கள் தொடுக்கப்பட்டதன் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடர் முழுவதும், அபு ஆஸ்மி இடைநீக்கம் செய்யப்பட்டார். 

அவுரங்கசீப் குறித்து அபு ஆஸ்மி புகழ்ந்து பேசிய இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குலாபாத்தின் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் எம்.பி நவ்நீத் ராணா, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தார். இவரை தொடர்ந்து, பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

following controversy Devendra Fadnavis' plan Demolition of Aurangzeb's tomb

இந்த நிலையில், அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்பதை தான் மாநில அரசும் விரும்புகிறது. ஆனால், அது ஒரு பாதுகாக்கப்பட்ட தளம். சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த இடம் தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI)யின் பாதுகாப்பின் கீழ் வந்தது. அதனால், அதை சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்