
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்விழாச்சூரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கோவிந்தராஜ். இவரின் மகள் சிவானி (வயது 13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிவானி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தொடர் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று (15.03.2025) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை அவருடைய சொந்த ஊர் கிராமத்திற்கு எடுத்துவரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து இதுவரை எந்த ஒரு அரசு அலுவலர்களோ யாரும் வந்து அந்த குடும்பத்தாரை பார்த்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.
அதேபோன்று அப்பகுதியில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிமி நாசினி தெளிக்கவில்லை. எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் மிகுந்து வருத்தத்தை தெரிவிக்கின்றனர். சிறுமி உயிரிழப்பு அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.