மாணவி சோபியாவை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய என்று காவல்துறைக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்குப்பதிவு செய்து நவம்பர் 20ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கடந்த செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவரது இருக்கையின் அருகே பெற்றோருடன் அமர்ந்திருந்த கனடாவில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பயின்று வரும், தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் சாமியின் மகள் லூயிஸ் சோபியா(வயது23), தமிழிசையை பார்த்ததும், ’பாசிச பா.ஜ. ஒழிக’ என்று கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழிசைக்கும், மாணவி சோபியாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழிசை, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியனிடம் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபியாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி, அவரை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுதலை செய்தார்.
இதன் பின்னர், தமிழிசை உள்ளிட்ட 10 பேர், சோபியாவை தூத்துக்குடி விமான நிலையத்தில் மிரட்டியதாகவும், ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த செப்டம்பர் 3ம் தேதி புதுக்கோட்டை போலீசிலும், 14ம் தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடமும் சோபியாவின் தந்தை சாமி புகார் அளித்தார். இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் சார்பில் வழக்கறிஞர்கள் அதிசயகுமார், சந்தனசேகர், செந்தில்குமார், திலீபன் உள்ளிட்டோர் தூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 3ல் மனுத்தாக்கல் செய்தனர். அதில் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் 10 பேர் மீது சட்டப் பிரிவுகள் 341, 294(பி), 506 (1) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி.
இந்த வழக்கில் விசாரணையை அடுத்து இன்று, தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.