உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா மீதான பதவிநீக்க தீர்மானத்தை துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபக் மிஷ்ரா. இவர் நீதித்துறையை தவறாக பயன்படுத்தியது, சக நீதிபதிகளே நீதிபதிகள் நியமன விவகாரத்தில் முறையற்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட ஐந்து அம்ச குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தீபக் மிஷ்ராவை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு எதிர்க்கட்சிகள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை வழங்கப்பட்ட இந்த மனுவில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட ஏழு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 64 மாநிலங்களவை எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவிநீக்கம் செய்ய 50 மாநிலங்களவை எம்.பி.க்களின் கையெழுத்தே போதுமானது என்ற நிலையில், இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த சட்ட ஆலோசகர்களுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, இன்று காலை தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவை பதவிநீக்கம் செய்யக்கோரிய மனுவை வெங்கையா நாயுடு நிராகரித்ததாக மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது. மேலும், மாநிலங்களவையில் கொடுக்கப்பட்ட மனு பரிசீலனையில் இருக்கும்போது, அதில் உள்ள விவரங்களை செய்தியாளர்களிடம் கூறியது விதிகளுக்கு புரம்பானது எனவும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.