உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆக்சிஜன் சிலிண்டர்கள் தீர்ந்துபோனதால், மூளைவீக்கப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தன. அப்போது தன்னால் முடிந்தளவிற்கு சிலிண்டர்களை வெளியில் வாங்கி குழந்தைகளைக் காப்பாற்றியவர் மருத்துவர் கஃபீல்கான்.
ஆனால், சில தினங்களிலேயே அவர்மீது கிரிமினல் வழக்குப்பதிந்து சிறையில் தள்ளியது அரசு. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் சிறையில் இருந்த கஃபீல்கான் பலமுறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

அவர் சிறையில் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், உடல்நலக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கஃபீல்கானுக்கு உரிய நீதி வழங்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் கஃபீல்கான் தரப்பில் மீண்டும் ஜாமீன் கோரி மனு கொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் கஃபீல்கானுக்கு ஜாமீன் வழங்குவதாக அறிவித்த நிலையில், அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘குழந்தைகள் இறப்புக்கு கஃபீல்கான்தான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கும், கஃபீல்கானுக்கும் இடையே எந்த வர்த்தக தொடர்பும் இல்லை. மருத்துவ பணியில் அலட்சியமாக அவர் நடந்துகொண்டதாக தகவல்கள் இல்லை. இதுவரை அவர்மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில், சாட்சிகளை மிரட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை’ எனக் கூறி அரசு மனுவை தள்ளுபடி செய்து, மருத்துவர் கஃபீல்கானுக்கு ஜாமீன் வழங்குவதை உறுதிசெய்தார்.

முன்னதாக, மருத்துவர் கஃபீல்கான் சிறையில் இருந்தபடி தனது நிலை குறித்து கடிதம் எழுதியிருந்தார். அதில், நிர்வாகக் கோளாறுகளை மறைப்பதற்காக தான் பலிகடா ஆக்கப்பட்டதாகவும், தன் வாழ்க்கை தற்போது தலைகீழாக மாறிப்போனதாகவும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.